செய்திகள் (Tamil News)

வாணாபுரம் வனப்பகுதியில் வேட்டைக்கு சென்ற வாலிபர் மின்வேலியில் சிக்கி பலி

Published On 2017-04-27 11:31 GMT   |   Update On 2017-04-27 11:31 GMT
வாணாபுரம் வனப் பகுதியில் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி பலியானார்.
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை அருகே உள்ள வாணாபுரம் வனப்பகுதியில் மான், முயல், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. இங்கு தினமும் நள்ளிரவில் மர்ம கும்பல் நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டைக்கு வருகிறார்கள். வனப்பகுதியில் பதுங்கி விலங்குகளை சுட்டு வேட்டையாடுகிறார்கள்.

நாட்டு துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் பால்ஸ் எனப்படும் ரவை குண்டுகள், வனவிலங்குகளின் உடலை துளைக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் விலங்குகள் இறக்கின்றன. இதையடுத்து வேட்டை கும்பல் தோலை உறித்து கறியை கூறுபோட்டு விற்பனைக்காக ஊருக்குள் கொண்டு செல்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை சுற்றிலும் சட்ட விரோதமாக ஒரு சில விவசாயிகள் மின் வேலி அமைத்துள்ளனர். வன விலங்குகள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க வனப்பகுதி மற்றும் விளை நிலங்களுக்கு இடையே மின்வேலி அமைத்துள்ளனர்.

இந்த மின்வேலியில் காட்டுப் பன்றி, முயல், மான் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி சிக்கி செத்து மடிகின்றன. வேட்டைக்கு செல்பவர்களும் மின்வேலியில் சிக்கி காயம் அடைவதோடு, மின்சாரம் தாக்கியதில் இறக்கவும் செய்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளது.

மின்வேலி அமைத்தவர்கள், பலியான விலங்குகளின் உடலை யாருக்கும் தெரியாமல் கைப்பற்றி உடனடியாக புதைத்து விடுகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 3 வாலிபர்கள், வாணாபுரம் அருகே தென் கரும்பலூர் வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றனர்.

காட்டு பன்றி போன்ற ஒரு விலங்கை கண்டதும், அவர்கள் துரத்தியுள்ளனர். அப்போது, விவசாய நிலம் அருகே அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் வேட்டை கும்பலை சேர்ந்த ஒரு வாலிபர் சிக்கினார். இதில் அவர் மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்து பலியானார்.

உடன் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இன்று காலை தகவலறிந்ததும், வாணாபுரம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின் வேலியில் சிக்கி பலியான வாலிபரின் உடலை பார்வையிட்டு அக்கம், பக்கத்தில் விசாரணை நடத்தினர்.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற தகவல் உடனடியாக தெரிய வரவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் மற்றும் மின்வேலி அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

தண்டராம்பட்டு அடுத்த சிறுபக்கம் தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 43). இவர், அங்குள்ள வனப்பகுதியில் முயல் மற்றும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக வலை விரித்து காத்திருந்தார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனவர் வெங்கட்ராமன் மற்றும் வன ஊழியர்கள் மணி, பொன்னுரங்கம், சிவக்குமார், பாலாஜி ஆகியோர் காத்தவராயனை பிடித்தனர். அவரிடம் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர்.

Similar News