செய்திகள் (Tamil News)

ஆம்பூரில் பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

Published On 2017-05-11 10:49 GMT   |   Update On 2017-05-11 10:49 GMT
ஆம்பூர் அருகே காட்டுப் பன்றிக்கு வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள வடபுதுப்பட்டு கீழ்முருங்கை மலை அடிவார பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் பாண்டு (வயது 40). விவசாயி. இவர், இன்று காலை 7 மணியளவில் தனது நிலத்துக்கு சென்றபோது, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சுருண்டு விழுந்து பலியானார்.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர். தகவலறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விசாரணையில், பாண்டு தனது நிலத்தை சுற்றிலும் காட்டுப் பன்றிகள் தொல்லை இல்லாமல் தடுக்க மின்வேலி அமைத்திருந்தார்.

இன்று காலை தூங்கி எழுந்து சென்ற பாண்டு மின் வேலியில் எதிர்பாராத விதமாக சிக்கி மின்சாரம் தாக்கியதில் இறந்தது தெரிய வந்தது. அதே நேரத்தில் மின் மோட்டார் சுவிட்சை போட்ட போது, மின்சாரம் தாக்கி பாண்டு இறந்ததாக உறவினர்கள் கூறினர்.

கீழ் முருங்கை மட்டுமின்றி ஆம்பூரின் பல பகுதிகளில் விவசாய நிலங்களை காட்டு பன்றிகள் நாசப்படுத்துகின்றன. இதனை தடுக்க அனுமதியின்றி விவசாயிகள் நிலங்களை சுற்றிலும் மின் வேலி அமைக்கின்றனர். இதில் சிக்கி பன்றி உள்பட வன விலங்குகள் அடிக்கடி செத்து மடிக்கின்றன.

சில நேரங்களில் வேட்டை கும்பலும், விவசாயிகளுமே பாண்டு இறந்ததை போல எதிர்பாராத விதமாக மின் வேலியில் சிக்கி பரிதாபமாக இறக்கிறார்கள். பலியான விவசாயி பாண்டு உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News