செய்திகள் (Tamil News)

பாளையில் இருந்து கேரளாவுக்கு வேனில் ரேசன் அரிசி கடத்தல்: டிரைவர் கைது

Published On 2017-09-15 13:21 GMT   |   Update On 2017-09-15 13:21 GMT
கேரளாவுக்கு வேனில் 550 கிலோ ரேசன் அரிசி கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:

பாளை பகுதியில் சிலர் வீடுவீடாக சென்று ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் பாளை மார்க்கெட் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கோட்டூர் ரோட்டில் இருந்து ஒரு வேன் புறப்பட்டு மெயின்ரோட்டுக்கு வந்தது. உடனடியாக போலீசார் அந்த வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் சின்ன சின்ன மூட்டைகளாக 50-க்கும் மேற்பட்ட மூட்டைகள் இருந்தன. அதில் 550 கிலோ ரேசன் அரிசி இருந்தது. அவற்றை பேட்டைக்கு கடத்தி அங்கிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வேனையும், அதில் இருந்த 550 கிலோ ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். வேனை ஓட்டி வந்த டிரைவர் ஆறுமுகம் (வயது 33) என்பவரையும் கைது செய்தனர். இவர் பாளை கோட்டூர் ரோட்டைச் சேர்ந்தவர்.

இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளது? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News