செய்திகள் (Tamil News)

திருச்செந்தூரில் தலைமை ஆசிரியையை தாக்கி 17 பவுன் நகை பறிப்பு

Published On 2017-10-31 09:37 GMT   |   Update On 2017-10-31 09:37 GMT
தலைமை ஆசிரியையை தாக்கி 17 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள பள்ளிப்பத்து பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி அன்னமேரி(வயது48). இவர் அப்பகுதி மேலகாணம் கிராமத்தில் ஆர்.சி.பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ளார்.

சம்பவத்தன்று இவர் பள்ளி முடிந்து மொபட்டில் திருச்செந்தூருக்கு வந்தார். திருச்செந்தூர் மணக்காடு ரோட்டில் அவர் சென்றபோது அந்த வழியே மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

அவர்கள் திடீரென அன்னமேரியை வழிமறித்து அருகில் உள்ள கிராமத்துக்கு வழி கேட்டனர். அன்னமேரி வழி சொன்னதும் மோட்டார் சைக்கிளில் சிறிது தூரம் சென்று திரும்பி வந்தனர். அன்னமேரியிடம் அவர்கள் நீங்கள் தப்பான வழியை சொல்லிவிட்டீர்கள் என பேச்சு கொடுத்தவாறு அவர் அணிந்திருந்த 17½ பவுன் நகையை பறிக்க முயன்றனர். நகையை பறிக்க முடியாததால் மோட்டார்சைக்கிளைவிட்டு இறங்கி வந்து அன்னமேரியை அந்த நபர்கள் தாக்கினர்.

இதனால் அன்னமேரி நிலைகுலைந்து கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் அன்னமேரியின் கழுத்தில் கிடந்த நகை பறித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ. 5 லட்சம். இதுபற்றி அன்னமேரி திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Similar News