செய்திகள் (Tamil News)

பட்டாசு உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு: சிவகாசியில் நாளை கடைகள் அடைப்பு

Published On 2018-01-02 03:58 GMT   |   Update On 2018-01-02 03:58 GMT
பட்டாசு உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சிவகாசியில் நாளை கடை அடைப்பு நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #fireworks #shutdown #Sivakasi
விருதுநகர்:

பட்டாசு உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சிவகாசியில் நாளை கடை அடைப்பு நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கேட்டு கொல்கத்தாவை சேர்ந்த தத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது பட்டாசு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு தங்களுக்கு பாதகமாக அமைந்தால் பட்டாசு தொழில் முற்றிலும் பாதிக்கப்படும். வழக்கை காரணம் காட்டி தற்போதே விற்பனையாளர்கள் பட்டாசு வாங்க மறுக்கிறார்கள்.

எனவே தங்களது வாழ் வாதாரத்தை காக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூற வேண்டும்.

சுற்றுச்சூழல் சட்டத்தில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி பட்டாசு உரிமையாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொழிற்சாலைகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 859 பட்டாசு தொழிற்சாலைகள், அதன் சார்பு தொழிற்சாலைகள் கடந்த 8 நாட்களாக மூடப்பட்டு உள்ளன. இதனால் அங்கு வேலை பார்க்கும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று அனைத்து கட்சி கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, காங்கிரஸ் முன்னாள் நகரமன்ற தலைவர் ஞானசேகரன், முனியாண்டி, உதயசூரியன் (தி.மு.க.), சதுரகிரி (விடுதலை சிறுத்தைகள்), ஜீவா (இந்திய கம்யூனிஸ்டு) மற்றும் பல்வேறு கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தற்போது பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளால் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை மத்திய -மாநில அரசுகளுக்கு எடுத்துக்கூறவும், பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டியும் நாளை (3-ந் தேதி) சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர் களில் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காய்கறி மார்க்கெட், ஓட்டல்கள், கடைகள் என அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் அடைப்பது, காலை 10 மணிக்கு சிவகாசி பஸ் நிலையம் முன்பு அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

8-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

#tamilnews #fireworks #shutdown #Sivakasi

Similar News