செய்திகள் (Tamil News)

தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமில் யானைகளை கண்டு ரசித்த பொதுமக்கள்

Published On 2018-01-08 10:48 GMT   |   Update On 2018-01-08 10:48 GMT
நேற்று ஞாயிற்றுக் கிழமையாதலால் தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமை பார்வையிட பொதுமக்கள் அதிக அளவில் வந்தனர்.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.

முகாமில் 33 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. 4-வது நாளான நேற்று முகாம் களை கட்டியது. காலையில் வழக்கம் போல் யானைகள் உற்சாகத்துடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு குளியல் மேடை மற்றும் ‌ஷவர் பாத்களில் ஆனந்தமாக குளித்தது. பின்னர் யானைகளுக்கு பசுந்தீவனம் உணவு வழங்கப்பட்டது.

அழகர்கோவில் யானை, சுந்தரவள்ளி தாயார் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்யானை ஆகிய யானைகள் கட்டப்பட்ட இடத்தில் மரத்தின் நிழல் இல்லாததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருக்க துணியால் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்யானை தெய்வானை குறட்டை விட்டு அயர்ந்து தூங்கியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

கடந்த முகாம்களில் நட்பு கொண்ட யானைகள் முகாம் தொடங்கிய 4 நாட்களில் மீண்டும் நட்பு கொண்டு ஒன்றையொன்று தும்பிக்கையால் தொட்டுத்தழுவி அதன் பாஷையில் பேசி மகிழ்ந்தன.

நேற்று ஞாயிற்றுக்கிழமையாதலால் முகாம் களைகட்டியது. காலை முதலே முகாமிற்கு பார்வையாளர்கள் சாரைசாரையாக வந்த வண்ணம் இருந்தனர். முகாம் முன்பு குவிந்த பார்வையார்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று யானைகளைக் கண்டு ரசித்தனர்.

Similar News