செய்திகள் (Tamil News)

திருமங்கலம் தொகுதியில் ரூ. 35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

Published On 2018-01-15 09:31 GMT   |   Update On 2018-01-15 09:31 GMT
திருமங்கலம் தொகுதியில் பொதுமக்களுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
பேரையூர்:

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட ஆலம்பட்டி, கட்ராம்பட்டி, அலப்பலசேரி, மதிப்பனூர் சவுடார்பட்டி கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு மனுநீதி முகாம் நடந்தது. இதில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு மனுக்களை பெற்று பேசியதாவது:-

திருமங்கலம் தொகுதியில் கிராமசாலைகள், தேசிய சாலை மற்றும் மாநில சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்பட்ட சாலைகளாக அமைத்து தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

அம்மாவின் அரசு அவர் வகுத்துக்கொடுத்த திட்டங்களை நூறு சதவீதம் சத்தியமாக நிறைவேற்றும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.

இந்தியாவில் முதன் முறையாக வருவாய் கிராமங்களுக்கு வட்டாட்சியர், அலுவலக அதிகாரிகள் நேரடியாக சென்று 50 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட ஒரே அரசு அம்மாவின் அரசு.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்மநாயக்கன்பட்டி, மேலப்பட்டி, கீழப்பட்டி, சந்தையூர், ராவுதன்பட்டியில் நடைபெற்ற மனுநீதிநாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெற்றார்.

பின்னர் 247 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித்தொகை மாற்றுத்திறனாளி சைக்கிள் பட்டாமாறுதல் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் மகேந்திரன், முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, முன்னாள் தொகுதிசெயலாளர் ஆண்டிச்சாமி, வழக்கறிஞர் திருப்பதி நிர்வாகி சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News