செய்திகள் (Tamil News)

நெல்லை அருகே கார்-லாரி மோதி விபத்து - இளம்பெண் உயிரிழப்பு

Published On 2018-05-14 09:11 GMT   |   Update On 2018-05-14 09:11 GMT
நெல்லை அருகே இன்று காலை காரும் லாரியும் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நெல்லை:

பாளை மேலப்பாளையம் வசந்தாபுரத்தை சேர்ந்தவர் மணி(வயது30). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனுசியா (25). இவர்களுக்கு தர்‌ஷன் என்ற மகன் உள்ளான்.

நேற்று மணி தனது மனைவி, மகன், தாய் தனம் (52), தம்பி குமார் (28) ஆகியோரையும், நண்பரான நெல்லை சந்திப்பு விளாகத்தை சேர்ந்த சண்முகம் (38), அவரது மனைவி செல்வி (33), அவர்களது குழந்தைகள் கார்த்திக் (8), சுபஸ்ரீ (3) உள்ளிட்டோரையும் அழைத்துகொண்டு ஒரு காரில் குற்றாலத்துக்கு சென்றார்.

காரை தச்சநல்லூர் நம்பிராஜபுரத்தை சேர்ந்த சுரேந்தர் (21) என்பவர் ஓட்டிச்சென்றார். அவர்கள் இரவு முழுவதும் பல்வேறு அருவிகளுக்கு சென்று குளித்து விட்டு இன்று அதிகாலை ஊர் திரும்பினர். அவர்களது கார் இன்று அதிகாலை 5.15 மணி அளவில் நெல்லை அபிஷேகப்பட்டி ‘பவர்கிரிட்’ அருகே வந்தது.

அப்போது அவர்களது காரும், எதிரே தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த மணியின் மனைவி அனுசியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

மணி மற்றும் அவரது தம்பி குமார், தாய் தனம், சண்முகம், அவரது மனைவி செல்வி, அவர்களது குழந்தைகள் கார்த்திக், சுபஸ்ரீ, டிரைவர் சுரேந்தர் ஆகிய 8 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இந்த விபத்து பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் பணியான அனுசியாவின் உடலை போலீசார் மீட்டு பிரிதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயம் அடைந்த 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மணி, குமார் ஆகிய சகோதரர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் கோல்டன் சிங் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் டிரைவரான கடைய நல்லூரை சேர்ந்த தங்க மாரியப்பன் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News