சத்திரக்குடியில் வீடு புகுந்து பெண்ணிடம் 13 பவுன் கொள்ளை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள டி.கருங்குளத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மனைவி அம்பிகாவதி (வயது 40). உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்ற இவர், இரவில் வீடு திரும்பினார். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்து கணவன்-மனைவி இருவரும் தூங்கினர்.
இன்று அதிகாலை 4 இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். கருப்பு நிற உடை அணிந்திருந்த 4 பேரும் தலையில் ஹெல்மேட் போட்டிருந்தனர். அவர்கள் அம்பிகாவதி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.
இதனால் திடுக்கிட்டு அம்பிகாவதி கண் விழித்த போது ஹெல்மெட் அணிந்து 4 பேர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் 4 இளைஞர்களும் அவரது கழுத்தில் கிடந்த 13 1/2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
அம்பிகாவதியின் கூக்குரல் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டனர். ஆனால் அதற்குள் ஹெல்மெட் திருடர்கள் மாயமாகி விட்டனர்.
இந்த துணிகர கொள்ளை குறித்து சத்திரக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து ஹெல்மெட் திருடர்களை தேடி வருகிறார். சம்பவ இடத்திற்கு துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
இதேபோல் சத்திரக்குடி இலந்தகுளம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் ராமசுப்பிரமணியன், வீட்டில் கதவை திறந்து வைத்து தூங்கினார்.
அப்போது அவருடைய கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலியை யாரோ திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சத்திரக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.