செய்திகள் (Tamil News)

புதுவை அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை - பணம் கொள்ளை

Published On 2018-05-24 09:50 GMT   |   Update On 2018-05-24 09:50 GMT
புதுவை அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
சேதராப்பட்டு:

புதுவை அருகே தமிழக பகுதியான பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர் பி.கே.டி.முரளி (வயது54) இவர் வானூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார். இவரது தந்தை திருக்காமு. இவர் முன்னாள் சேர்மன் ஆவார். நேற்று இரவு முரளியும் அவரது தந்தை திருக்காமு ஒரு அறையிலும், மற்றொரு அறையில் முரளியின் மனைவி உஷா (50) மற்றும் முரளியின் தாய் வசந்தி (79) ஆகியோர் தூங்கினர்.

நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவன் முரளியின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தான். முதலில் முரளி மற்றும் அவரது தந்தை தூங்கிய அறை கதவை திறக்காதபடி சேலையால் கட்டினான். பின்னர் பூஜை அறையில் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தான்.

அதனை தொடர்ந்து உஷா தூங்கிய அறையில் புகுந்த கொள்ளையன் அங்கு ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்த உஷாவின் கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் செயினை பறித்தான். உஷா திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது மர்ம நபர் ஆடை ஏதும் இல்லாமல் நிர்வாணமாக கையில் இரும்பு கம்பியுடன் நிற்பதை கண்டு அலறினார்.

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு முரளி கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு சேலையால் கட்டப்பட்டு இருந்ததால் முரளியால் உடனடியாக அறைகதவை திறக்க முடியவில்லை. பின்னர் உஷாவும், வசந்தியும் அபய குரல் எழுப்பியதால் ஊர் மக்கள் திரண்டு வந்தனர்.

ஆனால் அதற்குள் கொள்ளையன் வீட்டின் பின்பக்கமாக கொல்லைபுறமாக தப்பி ஓடிவிட்டான். தப்பி செல்லும் போது வீட்டின் தோட்டத்தில் உலர வைத்திருந்த உஷாவின் சேலை மற்றும் ஜாக்கெட்டை எடுத்து சென்று சிறிது நேரத்தில் வீசிவிட்டு சென்று விட்டான். கொள்ளைபோன நகை பணத்தின் மதிப்பு ரூ. 5 லட்சமாகும்.

இதுகுறித்து முரளி வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள், மோப்பநாயை வரவழைத்தனர். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சவுக்கு தோப்பு வழியாக ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர்.

தொடர்ந்து இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டவன் சைக்கோவா, இவனுடன் யாராவது சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க. பிரமுகர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் குமார் என்பவர் வீட்டில் புகுந்து நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News