செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் - தூத்துக்குடி ஆட்சியர்

Published On 2018-05-26 13:07 GMT   |   Update On 2018-05-26 13:07 GMT
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் என கூறியுள்ளார். #ThoothukudiPoliceFiring #SterliteKillings #CollectorsReport

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். 



இந்நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும். மே 24-ம் தேதி அதிகாலை ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொழிற்சாலை எந்த விதத்திலும் தான் தன்னிச்சையாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை பயன்படுத்த முடியாது. ஆலை பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுவந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. 

2013-ம் ஆண்டிலேயே ஆலைக்கான மின் இணைப்பை துண்டிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தை அணுகி அனுமதி பெறப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனம் இயங்குவதற்கான இசைவாணை மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலை இயங்க ஏப்ரல் 9-ம் தேதி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்தது. அதன்பின் ஆலை இயங்கவில்லை. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #ThoothukudiPoliceFiring #SterliteKillings #CollectorsReport
Tags:    

Similar News