செய்திகள்

பக்தர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது- அர்ச்சர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை

Published On 2018-06-05 09:21 GMT   |   Update On 2018-06-05 09:21 GMT
கோவிலில் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் பறிக்கும் செயலில் பூசாரிகள் ஈடுபடக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. #MaduraiHighCourt
மதுரை:

ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.250, ரூ.150, ரூ.100 கட்டண தரிசன முறை அமலில் உள்ளது. இந்த கட்டண டிக்கெட் வாங்கும் பக்தர்கள் சாமியை அருகில் நின்று தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

கோவிலுக்கு சம்பந்தமே இல்லாத பலர் கோவில் முன்பகுதியில் நின்று கொண்டு பக்தர்களை சாமி அருகே அழைத்துச் சென்று தரிசிக்க வைப்பதாக கூறி டிக்கெட் வாங்காமல் கோவிலுக்குள் அழைத்து செல்கின்றனர்.

அதே நேரத்தில் டிக்கெட்டுக்கு உரிய கட்டணத்தை வசூலித்துக்கொள்கின்றனர். இப்பணத்தை கோவில் நிர்வாகத்திடம் செலுத்துவதில்லை.

இவ்வாறு கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்த தனி குழு அமைக்கவும், கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத அர்ச்சகர்கள், பக்தர்களிடம் பணம் வசூலிக்க தடை விதித்தும், கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும், கோவிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.வி. முரளிதரன், டி. கிருஷ்ணவள்ளி ஆகியோர் ஏற்கனவே விசாரித்து தீர்ப்பினை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் இன்று பிறப்பித்து உள்ளனர்.

கோவிலில் சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட பூசாரிகளால் மட்டுமே பூஜைகள் செய்யப்படுகின்றன என்பதை இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர் மற்றும் கோவில் செயல் அலுவலர் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பக்தர்களையும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி ஒரே விதமாக நடத்த வேண்டும்.

கோவில் ஊழியர்கள் மற்றும் பூசாரிகள் வருகைக்காக பயோமெட்ரிக் பதிவு கருவியை பொருத்த வேண்டும். பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் பூசாரிகள் ஈடுபடக்கூடாது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை கமி‌ஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

சட்டபூர்வமாக நியமிக்கப்படாத பூசாரிகள் குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர் மற்றும் கோவில் அதிகாரி ஆகியோர் வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர். #MaduraiHighCourt
Tags:    

Similar News