செய்திகள்

ரூ.2 கோடியில் அமைக்கப்பட்ட தென்னூர் அண்ணாநகர் அறிவியல் பூங்கா திறப்பு

Published On 2018-06-10 17:05 GMT   |   Update On 2018-06-10 17:05 GMT
ரூ.2 கோடியே 14 லட்சத்தில் அமைக்கப்பட்ட தென்னூர் அண்ணாநகர் அறிவியல் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. திறந்தவெளி அரங்கமும் பயன்பாட்டுக்கு வந்தது.
திருச்சி:

திருச்சி மாநகராட்சி 50-வது வார்டு தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் அருகில் மத்திய அரசின் அடல் புனரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றம் திட்டத்தின் கீழ் அண்ணாநகர் அறிவியல் பூங்கா ரூ.2 கோடியே 14 லட்சத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை நேற்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

இந்த பூங்காவில் 2,005 சதுர அடி பரப்பளவில் அலுவலகத்துடன் கூடிய அறிவியல் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 20 வகையான அறிவியல் உபகரணங்கள் நிறுவப்பட்டு உள்ளன. உயிரி அறிவியல் பூங்கா மற்றும் ஆற்றல் பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளன. ராட்சத டைனோசர் உருவங்களும் இடம் பெற்று உள்ளன. புல்வெளி தளம், அழகிய பூச்செடிகள் மற்றும் பசுமை தாவரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அறிவியல் கண்காட்சிகள், கருத்தரங்குகள், சொற் பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையிலும், அதை 200 பேர் அமர்ந்து காணும் வகையிலும் கேலரி வசதிகளுடன் கூடிய திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு மற்றும் ஒலிபெருக்கி வசதியுடன் கூடிய இந்த அரங்கம் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.

பூங்காவிற்கு வரும் சிறுவர், சிறுமிகள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கி விளையாடுதல் போன்ற பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டு உள்ளன. பெரியோர், முதியோரின் வசதிக்காக நடைபயிற்சி பாதை, பூங்காவுக்கு வரும் அனை வரையும் வரவேற்கும் வகையில் பாறைகளுடன் கூடிய செயற்கை நீருற்று, உயர்கோபுர மின் விளக்கு, அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

கட்டணம் எதுவும் இன்றி இலவசமாக அனுமதிக்கப்பட்டதால் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் நேற்று இரவு பூங்காவுக்கு வந்து மகிழ்ச்சியாக பொழுது போக்கினார்கள். இந்த பூங்காவானது தினமும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, ஸ்ரீரங்கம் கோட்டம் மேலூர் ரோட்டில் ரூ.58 லட்சத்தில் நடைபயிற்சி தளம் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்துடன் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. ப.குமார் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பூங்காவை திறந்து வைத்தனர். 
Tags:    

Similar News