செய்திகள்

அரியலூர் அருகே மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2018-06-22 16:11 GMT   |   Update On 2018-06-22 16:11 GMT
மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.மாத்தூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர்  அங்குள்ள வெள்ளாற்றில்  மணல் அள்ளி வருகின்றனர். மணல் அள்ளக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்தும்,  தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. மேலும் தங்களுக்கு ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அப்பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்தநிலையில் நேற்று வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த  இளம்பரிதி, வீரமுத்து ஆகியோரின் வண்டிகளை செந்துறை தாசில்தார் உமாசங்கரி மற்றும் அதிகாரிகள் பிடித்ததோடு, 2பேர் மீதும் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தளவாய்  போலீசார் 2பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையறிந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் இன்று காலை தளவாய் தனியார் சிமெண்ட் ஆலை அருகே கடலூர் பெண்ணாடம் சாலையில் திடீரென மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதன் காரணமாக  அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இது குறித்த தகவல் அறிந்ததும்  தளவாய் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)  மோகன் மற்றும் வருவாய் அதிகாரி செந்தில் ஆகியோர் சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தங்களுக்கு முறையாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். இளம்பரிதி, வீரமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள்- போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து  தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News