செய்திகள்

திருமங்கலம் அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு

Published On 2018-07-02 11:26 GMT   |   Update On 2018-07-02 11:26 GMT
திருமங்கலம் அருகே குடிபோதையில் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள சின்னஉலகாணியை சேர்ந்த மகாலிங்கம் மகன் மாரியப்பன் (வயது 30). மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார்.

நேற்று மாலை இவர், கல்லணை விலக்கில் பாலன் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது அவர், மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

அதே ஓட்டலில் சின்னஉலகாணியை சேர்ந்த பாலு, செந்தில் ஆகியோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களும் மது போதையில் இருந்துள்ளனர்.

3 பேருக்கும் ஆம்லெட் சப்ளை செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் மாரியப்பன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஓட்டல் உரிமையாளர் பாலனை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார்.

இதுகுறித்து பாலன் கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ்காரர் மாரியப்பன், பாலு, செந்தில் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஓட்டல் உரிமையாளர் பாலனை தாக்கியதில் ஆத்திரம் அடைந்த அவரது மைத்துனர் முருகன் என்பவர், போலீஸ்காரர் மாரியப்பனை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் போலீஸ்காரரின் மண்டை உடைந்தது. அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரிலும் கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News