செய்திகள்

மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் வேலைநிறுத்தம் - கிராமப்புறங்களில் பணிகள் பாதிப்பு

Published On 2018-07-04 16:29 GMT   |   Update On 2018-07-04 16:29 GMT
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராமப்புறங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.
நாமக்கல்:

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வு கூட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும். ஊழியர்களை எவ்வித விளக்கமும் கோராமல், பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும்.

முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் மொத்தம் உள்ள 1,033 பணியாளர்களில் 282 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மீதமுள்ள 751 பேர் வேலைக்கு வந்து இருந்ததால் நகர்புறங்களில் பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

இருப்பினும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட 282 பேரில் பெரும்பாலானவர்கள் ஊராட்சி செயலாளர்கள் என்பதால் நாமக்கல், எருமப்பட்டி என மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மூடி கிடந்தன. கிராமப்புறங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என ஊராட்சி செயலாளர்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News