செய்திகள்

உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு தனி இணையதளம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Published On 2018-07-10 02:13 GMT   |   Update On 2018-07-10 02:13 GMT
உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு தனி இணையதளம் உருவாக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPanneerselvam
சென்னை:

நிதித்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

சென்னை நந்தனத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டிடத்தில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் சுமார் 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 2 கூடுதல் தளங்கள் கட்டப்படும். நிதித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறையை சார்ந்த கட்டிடங்கள் அமைந்துள்ள இவ்வாளகத்துக்கு ‘அம்மா வளாகம்’ என பெயரிடப்படும்.

நெல்லை மாவட்ட கருவூலத்துக்கு சுமார் 21 ஆயிரத்து 400 சதுரஅடி பரப்பளவில் ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டிடம் கட்டப் படும்.

கருவூல கணக்குத்துறை பயன்பாட்டுக்காக ரூ.2.44 கோடி மதிப்பீட்டில் 38 புதிய ஜீப்புகள் வழங்கப்படுவதுடன், 38 புதிய டிரைவர் பணியிடங்களும் ஏற்படுத்தப்படும்.

சார் கருவூலங்கள் இல்லாத வட்ட தலைமையிடங்களில் புதிய சார் கருவூலங்கள் அமைப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்படும்.

உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கென தனி இணையதளம் உருவாக்கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பயன்கள் உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் அனுமதித்தல் பயன்பாட்டுக்காக கணினி ‘சர்வர்’ வழங்கப்படும்.

உள்ளாட்சி நிதி தணிக்கை துறை தணிக்கையாளர்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 165 புதிய மடிக்கணினிகள் வழங்கப்படும். 2-வது கட்டமாக ரூ.62½ லட்சம் மதிப்பீட்டில் 250 புதிய மடிக் கணினிகள் வழங்கப்படும்.

உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியர் அடையாள அட்டை வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களின் கணக்குகள் தணிக்கையின்போது கண்டறியப்பட்ட நிதி முறைகேடுகள், நிதி இழப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் ஆண்டறிக்கையாக தயாரிக்கப்படும்.

பால் கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை பணிகளை கூட்டுறவு தணிக்கைத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும்.

அரசுத்துறை நிறுவன தணிக்கை துறையின் சார்நிலை அலுவலகங்களுக்காக ரூ.23.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தலா 36 கணினிகள், அச்சுப்பொறிகள், ஸ்கேனர்கள் மற்றும் தடையற்ற மின்சாரம் தரும் கருவிகள் வழங்கப்படும்.

அரசுத்துறை நிறுவன தணிக்கைத்துறையில் ஆய்வாளர் நிலையில் இயங்கிவரும் 10 மாவட்ட அலுவலகங்கள் உதவி இயக்குனர் நிலைக்கு தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam
Tags:    

Similar News