செய்திகள்

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? - ஐகோர்ட்டு கேள்வி

Published On 2018-07-11 08:28 GMT   |   Update On 2018-07-11 08:28 GMT
சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார். #Idolsmuggling #Highcourt

சென்னை:

தமிழகத்தில் புராதன மற்றும் பழமையான கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டது. இவற்றை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடத்தி, சர்வதேச கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்துள்ளது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு படையை உருவாக்கினார். பின்னர் கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் காணாமல் போன சிலைகள் குறித்து இந்த தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கு அவ்வப்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கோவில் சிலைகளை பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வில்லை என்று நீதிபதி கருத்து கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி மகாதேவன், சைவமும், வைணவமும் தழைத்தோங்கும் தமிழகத்தில் சிலைத் திருட்டு என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடிக்குமானால் சிலை கடத்தல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் எழுந்து, சிலை கடத்தல் வழக்கை நீதிமன்றம் விசாரித்து கொண்டிருக்கும் பொழுதே அண்ணாமலை யார் பஞ்சலோக சிலை மாயமாகி விட்டது. ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இமெயில் மூலம் பல புகார்களை அரசுக்கு அனுப்பியும் எந்த பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பிளீடர் மகாராஜனிடம் கருத்து கேட்ட நீதிபதி, பின்னர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். விசாரணையை 13-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

Similar News