செய்திகள்

தமிழ்நாட்டில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது: வைகோ பேட்டி

Published On 2018-07-18 07:03 GMT   |   Update On 2018-07-18 07:03 GMT
தமிழ்நாட்டில் தற்போது ஊழல் உச்சத்தில் இருக்கிறது. தலை விரித்தாடுகிறது என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #vaiko #Corruption

ஆலந்தூர்:

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மலேசிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நடந்த வருமான வரி சோதனையில் பெருமளவு பணம், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிந்தேன். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, டெண்டர் எடுக்கும் காண்டிராக்டரிடம் இது கைப்பற்றப்பட்டது. இதில் முதல்-அமைச்சரின் உறவினருக்கும் தொடர்பு உண்டு என்று பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக அறிந்தேன்.

தமிழகம் தற்போது நாசகரமான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்று தவறான வழியில் பணம் சேர்த்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருமான வரி சோதனை மூலம் இதுவரை கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆகியவை வெறும் செய்தியாக மட்டும் இருந்து விடக் கூடாது. இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது ஊழல் உச்சத்தில் இருக்கிறது. தலை விரித்தாடுகிறது.

ஊழல் செய்தவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படா விட்டால், ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விடும். மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருந்த நம்பிக்கை போய் விடும். எனவே ஊழலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்.

அதிகாரத்தை பயன் படுத்தி இதுபோன்ற பணம் குவிப்பவர்களால் தமிழகத்துக்கு பெரும்கேடு சூழந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு ஊழல் மலிந்து இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.

மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. மத்திய அரசு வருமான வரிசோதனை நடத்தியதற்கு காரணம் கற்பித்து குறை கூறக்கூடாது. தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதை நிறைவேற்ற வேண்டும்.

11 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டுக்கே அவமானம், இழிவு. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மிருகங்களை விட கொடியவர்கள்.

பெண்களை தெய்வமாக வழிபடும் நாட்டில் இது போன்ற கொடும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவம் மிகவும் வேதனை தருகிறது.

இவ்வாறு வைகோ கூறினார். #vaiko #Corruption

Tags:    

Similar News