புதுக்கோட்டையில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு- தி.மு.க.வினர் கறுப்பு கொடி போராட்டம்: 500 பேர் கைது
புதுக்கோட்டை:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தூய்மை இந்தியா- வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
அவரது ஆய்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக கவர்னர் பங்கேற்க செல்லும் மாவட்டங்களில் தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சமீபத்தில் கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனால் கவர்னர் அடக்கு முறையை கையாள்வதாகவும், மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன.
இந்தநிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று புதுக்கோட்டையில் தூய்மை மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வினர் அறிவித்திருந்தனர்.
தடையை மீறி போராட்டம் நடத்தினால் கவர்னர் மாளிகை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஐ.பி.சி. 124-ன் கீழ் கைது செய்யப்படுவதோடு, அதன் மூலம் 7ஆண்டுகள் சிறை தண்டனைக்குள்ளாகும் நிலை ஏற்படும் என திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி தி.மு.க.வினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும் தடையை மீறி கவர்னருக்கு எதிராக புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என தி.மு.க.வி னர் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து அப்பகுதியை சுற்றிலும் 10 அடி உயரத்திற்கு போலீசார் தடுப்புகளை அமைத்தனர். மேலும் அங்கு தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கவர்னர், தூய்மை பணிகளை ஆய்வு செய்து முடித்ததும் மற்ற பணிகளை ஆய்வு செய்வதற்காக அங்கிருந்து புறப்பட தயாராக இருந்தார்.
இதற்கிடையே அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் கவர்னருக்கு எதிராக கறுப்பு கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி சாலைக்கு வர முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கவர்னர் வருகை, தி.மு.க. வினர் கறுப்பு கொடி போராட்டத்தையொட்டி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ தலைமையில், 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இதையடுத்து கவர்னர் ஆய்வு பணிக்கு வருவதற்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கவர்னர் வருகைக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க.வினர் 100-க் கும் மேற்பட்ட காவி நிறத்தில் பலூன்களை வானில் பறக்க விட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பலூன்களை பறிமுதல் செய்ததோடு பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவங்களால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. #DMK #GovernorBanwarilalPurohit