பொள்ளாச்சி அருகே விபத்து: பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி
- கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
- தலையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணவேணி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 51). இவர் வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். மாலை 6 மணி அளவில் அங்கலக்குறிச்சியில் இருந்து கோட்டூர் வழியாக போலீஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கோட்டூர் வள்ளியம்மாள் தியேட்டர் அருகே சென்றபோது அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் கிருஷ்ணவேணியின் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கிருஷ்ணவேணி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணவேணி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் கிருஷ்ணவேணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்து குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிருஷ்ணவேணியின் மீது மோட்டார்சைக்கிளை மோதிய வாலிபர் அங்கலகுறிச்சியைச் சேர்ந்த சிவகுமார் (21) என்பவர் என தெரியவந்தது. விபத்தில் இவரும் காயம் அடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகுமார் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.