சபரிமலையில் பதினெட்டாம் படி அருகே இருக்கும் கல் தூண்கள் இடித்து அகற்றம்
- மண்டல பூஜைக்காக வருகிற 15-ந்தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.
- சாமி தரிசனம் செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக் கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.
மண்டல பூஜைக்காக வருகிற 15-ந்தேதி மாலை கோவிலின் நடை திறக்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரம மின்றி சபரி மலைக்கு வந்து செல்வதற்கும், அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டு மின்றி, முன்பதிவு செய்யா மல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற் கான ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது.
இந்தநிலையில் சபரி மலை ஐயப்பன் கோவி லில் பதினெட்டாம் படி அருகே உள்ள கல் தூண்கள் அகற்றப்பட உள்ளன. மழை பெய்யும் போது படி பூஜைக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், பதினெட்டாம் படியை பாதுகாக்கவும் பதினெட்டாம் படி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு செதுக்கப்பட்ட கல் தூண்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் அந்த தூண்கள் பதினெட்டாம் படி ஏறக் கூடிய பக்தர்கள் மற்றும் படிகளில் பக்தர்கள் ஏறிச்செல்ல உதவுவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள போலீசாருக்கும் மிகவும் இடையூறாக இருந்துவந்தது.
இதன் காரணமாக பதினெட்டாம் படி பகுதியில் தேவையில்லாத கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து ஆய்வு மேற்கொண்டதில், கல்தூண்கள் பக்தர்கள் செல்வதற்கு தடையாக இருப்பதும், நெரிசல் ஏற்படுவதும் கண்டறியப்பட்டது. இதனால் அந்த கல்தூண்களை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
பதினெட்டாம் படி அருகே உள்ள கல் தூண்களை கட்டிய கட்டுமான கலைஞர்கள் சன்னிதானத்துக்கு வரவழைக்கப்பட்டனர். கல் தூண்களை இடித்து அகற்ற அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கல் தூண்களை இடித்து அகற்றும் பணி உடனடியாக தொடங்கப் பட்டன.
மண்டல பூஜைக்கு முன்னதாகவே கல்தூண்கள் முழுவதுமாக இடித்து அகற்றப்பட உள்ளது. இதனால் பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கும், பக்தர்கள் படியேறுவதற்கு உதவும் போலீசார் தங்களின் பணியை சரியாக மேற்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.