செய்திகள்

திருச்சிற்றம்பலம் அருகே தீ விபத்தில் 2 கூரை வீடுகள் சாம்பல்- சப்-கலெக்டர் நிவாரண உதவி

Published On 2018-07-28 14:59 GMT   |   Update On 2018-07-28 14:59 GMT
திருச்சிற்றம்பலம் அருகே நேற்று மதியம் தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சப்-கலெக்டர் நிவாரணத் தொகை வழங்கினார்.
திருச்சிற்றம்பலம்:

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி வடக்கு ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று மதியம் இவரது கூரை வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதில் அனைத்து ஆவணங்களும் பிற பொருட்களும் எரிந்து சாம்பலானது.     

இதே தெருவைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன், (46)  கூலித்தொழிலாளி ராமநாதபுரத்தில் செங்கல் சூளையில் வேலைபார்த்து வருகிறார். வீட்டில் உள்ள மற்றவர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று விட்டனர். அப்போது நீ இவரது கூரை வீட்டிற்கும் பரவியதால், முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த ஆவணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. 

தகவலறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்து நடந்த இடம் அருகாமையில் செருவா விடுதி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் மாணவர்கள் அனைவரும் அவரசம் அவசரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த  தீ விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 

தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் பார்த்தசாரதி, மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார் சாந்தகுமார் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவித்தொகை ஆகியவற்றையும் வழங்கினர்.
Tags:    

Similar News