செய்திகள்

அரக்கோணம் - வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது

Published On 2018-08-05 12:11 GMT   |   Update On 2018-08-05 12:29 GMT
அரக்கோணம் மற்றும் வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் மீது நடவடிக்கை பாய்கிறது. #Teachers

அரக்கோணம்:

பள்ளிக்கல்வி விளையாட்டு துறை சார்பில் அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் முள்வாய் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டிகள் நடந்தபோது, 2 ஆசிரியைகள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக மாணவிகளை குடை பிடிக்க வைத்தனர். போட்டி முடியும் வரை மாணவிகள் நின்றபடி ஆசிரியைகளுக்கு குடை பிடித்தனர்.

ஆசிரியைகளுக்கு மாணவிகள் குடை பிடித்த போட்டோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக, விசாரணை நடத்த அரக்கோணம் மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரனுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவிட்டார்.

விசாரணையில், மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள், அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரிவது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வேலூர் நேதாஜி மைதானத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது, வெயில் கொளுத்தியது. போட்டியில் நடுவராக இருந்த ஆசிரியை மாணவிகளை தனக்கு குடை பிடிக்க வைத்தார். இது, பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அரக்கோணத்தையடுத்து வேலூரிலும் ஆசிரியைகள் மாணவிகளை குடைபிடிக்க வைத்த சம்பவம் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலை தளங்களில் கல்வித்துறைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இதனால் கல்வித்துறையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அரக்கோணம் மற்றும் வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்து சர்ச்சையில் சிக்கிய ஆசிரியைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #Teachers

Tags:    

Similar News