செய்திகள்
நெய்வேலியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நெய்வேலியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் அருகே மாற்று குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பி-1 பிளாக்கில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ச்கேட் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.