செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ, கார் வசதி நாளை முதல் அறிமுகம்

Published On 2018-08-10 07:29 GMT   |   Update On 2018-08-10 07:29 GMT
மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் எளிதாக நகரில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல ஷேர் ஆட்டோ, கார் வசதியினை நாளை முதல் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிமுகம் செய்கிறது. #Metrotrain #Chennaimetrotrain

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிகள் வருகையை அதிகரிக்க நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

சராசரியாக தினமும் 50 ஆயிரம் பயணிகள் மட்டுமே மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். படிப்படியாக பயணிகளை அதிகரிக்க ரெயில் நிலையங்களில் பொது மக்களுடன் இணைந்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

புறநகர் மின்சார ரெயில் நிலையம் பஸ் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் பயணிகள் தொடர்ச்சியாக எளிதாக பயணம் செய்ய பஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மெட்ரோ ரெயில் பயணிகளை இணைக்கும் விதமாக ஷேர் ஆட்டோ, கார் வசதியினை வழங்க திட்டமிடப்பட்டு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் எளிதாக நகரில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதியினை நாளை அறிமுகம் செய்கிறது.

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்ல கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்ய ரூ.10 கட்டணமும், ஷேர் காருக்கு ரூ.15 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறிப்பிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் மட்டுமே இந்த வசதி அளிக்கப்பட உள்ளது.

 


ஷேர் கார் வசதி கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி, அண்ணாநகர் கிழக்கு மெட்ரோ ரெயில் நிலையங்களில் கிடைக்கும். ஷேர் ஆட்டோ வசதி ஏ.ஜி.-டி.எம்.எஸ். கிண்டி, ஆலந்தூர், பரங்கிமலை, ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் என்று மெட்ரோ நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வசதி பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.

ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதி அளிக்கப்பட உள்ள மெட்ரோ நிலையங்களில் இருந்து எந்தெந்த பகுதிகள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வருகிறது என்பதை ஆய்வு செய்து அந்த பகுதிகளுக்கு இந்த வசதியை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோ, கார் வசதி கிடைக்கும் என்ற விவரங்கள் அந்தந்த மெட்ரோ ரெயில் நிலையங்களில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிகள் பயணம் செய்யலாம்.

இந்த வசதி அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வழங்கவும் முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்திட்டம் பரீட் சார்ந்த முறையில் தற்போது நடை முறைப்படுத்தப் படுகிறது. பொது மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து 30 நிமிடத்திற்கு ஒரு முறை என்கிற சர்வீசை 10 முதல் 15 நிமிடத்திற்கு ஒரு முறை என அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News