செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் நின்று வெள்ளத்தை செல்பி எடுத்த 13 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2018-08-18 10:55 GMT   |   Update On 2018-08-18 10:55 GMT
ஈரோடு மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் நின்று வெள்ளத்தை செல்பி எடுத்த 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை காண ஏராளமான பொதுமக்கள் கரையோரங்களில் குவிந்து வருகின்றனர்.

ஆற்றில் செல்லும் தண்ணீரை செல்போன் மூலம் போட்டோ எடுப்பது, குழுவாக நின்று கொண்டு செல்பி எடுப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கரையோரங்களில் ஒரு சில பகுதிகள் ஆபத்தானவை என்பதால் போலீசார் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் பாலம், பவானி பழைய பாலம் ஆகியவற்றில் வாகனங்கள், பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று போக்குவரத்திற்கு இடையூறாகவும், ஆற்றின் கரையோரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு தடையை மீறி சென்று செல்பி எடுத்து பொதுமக்களுக்கு இடையூறாகவும் செயல்பட்டதாக மாவட்டம் முழுவதும் 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சித்தோடு போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகளும், பவானி, பங்களாப்புதூரில் தலா 1 வழக்கும், சத்தியமங்கலத்தில் 3 வழக்கும் கவுந்தப்பாடியில் 2 வழக்குகள் என மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது:-

பொது மக்கள் யாரும் போலீஸ் தடை செய்துள்ள பகுதியில் நின்று போட்டோ எடுக்கக்கூடாது. அவ்வாறு மீறி போட்டோ (செல்பி) எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News