செய்திகள்
கடலூர் அருகே உள்ள தாமரைக்குளத்தில் வயலுக்குள் மழைநீர் புகுந்துள்ளதை படத்தில் காணலாம்.

கடலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை

Published On 2018-09-01 11:16 GMT   |   Update On 2018-09-01 11:16 GMT
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. #CuddaoreRain
கடலூர்:

வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், நெய்வேலி, பரங்கிப்பேட்டை உள்பட பல பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 2-வது நாளாகவும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், நெல்லிக்குப்பம், வடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், வேப்பூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல இடங்களில் இரவு 9 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. கடலூர் அருகே உள்ள நாணமேடு, உச்சிமேடு, சின்னகங்கணாங்குப்பம், தாமரைக்குளம் போன்ற பகுதிகளில் மழைநீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

மழையையொட்டி கடலூரில் நள்ளிரவில் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பெண்ணாடம், முருகன் குடி, திருமலைஅகரம், செம்பேரி, சவுந்தரசோழபுரம், இறையூர், ஆவினங்குடி, திட்டக்குடி போன்ற பகுதிகளிலும் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டியது.

வெண்கரும்பூர், மாளிகை கோட்டம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு திறந்த வெளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது.

சிதம்பரத்தில் தொடர்ந்து 2 நாட்களாக பலத்த மழை கொட்டியது. இதைத்தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சிதம்பரம் ரெயில் நிலையம் செல்லும் சாலை புதிதாக போடப்பட்டு இருந்தது. அந்த சாலை நேற்று பெய்த பலத்த மழையால் திடீரென்று உள்வாங்கியது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கீழே தவறி விழுந்து காயம் அடைந்தனர்.

உள்வாங்கிய சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #CuddaoreRain
Tags:    

Similar News