செய்திகள்

நெல்லையில் தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி காரை கடத்திச் சென்ற கும்பல்

Published On 2018-09-12 10:30 GMT   |   Update On 2018-09-12 10:30 GMT
தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி காரை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை:

நெல்லை உடையார்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் ஐம்பொன் நகைகள் செய்து விற்று வந்தார். இவரது நண்பர்கள் மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன்.

இவர்களில் ரகுராமகிருஷ்ணன் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். நம்பிராஜன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனிடையே சுரேஷ்குமார் சமீபத்தில் புதிதாக கார் வாங்கினார்.

கார் வாங்கியதை கொண்டாடுவதற்காக பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக சுரேஷ்குமார் தனது நண்பர்கள் ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோருடன் நெல்லை தாமிரபரணி ஆற்றுப் பகுதிக்கு காரில் சென்றார்.

அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு 3 பேரும் மது அருந்தினர். பின்னர் ஆற்றில் குளித்தனர். இந்த வேளையில் அப்பகுதிக்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரிடம் இங்கு எப்படி காரை நிறுத்தலாம்? என கேட்டு தகராறு செய்தனர்.

பின்னர் சுரேஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோர் தடுத்தனர். உடனே ஆத்திரமடைந்த கும்பல் அவர்களையும் தாக்கியது. பின்னர் 3 பேரையும் இழுத்து சுரேஷ்குமாரின் காருக்குள் போட்டனர். பின்னர் சுரேஷ்குமாரிடம் இருந்த கார் சாவியை பறித்து 3 பேரையும் காருடன் கடத்தி சென்றனர். காரை ஒருவர் ஓட்ட, மற்ற 2 பேர் காரில் இருந்தனர். 3 பேர் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றனர்.

சிறிது தூரம் சென்றதும் சுரேஷ்குமாரும், ரகுராமகிருஷ்ணனும் காரில் இருந்து குதித்து தப்பினர். நம்பிராஜனால் காரில் இருந்து குதிக்க முடியவில்லை. டக்கரம்மாள்புரம் பகுதியில் சென்றபோது நம்பிராஜனை காரில் இருந்து கீழே தள்ளிய கும்பல் காருடன் தப்பி சென்றது. கடத்தப்பட்ட காரில் சுரேஷ்குமாருக்கு சொந்தமான ஆவணங்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் இருந்தன. அவற்றுடன் கும்பல் தப்பிவிட்டது.

இதனிடையே கும்பல் தாக்கியதில் காயமடைந்த சுரேஷ்குமார், ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்குபதிவு செய்து காரை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News