செய்திகள்

டீசல் விலை ஏற்றத்தால் ரூ.100 கோடி இழப்பு- மாநகர பஸ்களின் எண்ணிக்கை குறைப்பு

Published On 2018-09-27 06:10 GMT   |   Update On 2018-09-27 06:10 GMT
டீசல் விலை ஏற்றத்தால் மீண்டும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #DieselPriceHike #MTC #ChennaiBus
சென்னை:

டீசல் விலை உயர்வால் தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

இதை சமாளிக்க போக்குவரத்து கழகங்களுக்கு அரசு டீசல் மானியம் அளித்து வந்தது. இந்த மானியத்தையும் அரசு குறைத்து விட்டது. இதனால் போக்குவரத்து கழகங்கள் மேலும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.

இதுபற்றி தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை ஏற்றத்தாலும், மாநில அரசின் டீசல் மானியம் குறைக்கப்பட்டதாலும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் பஸ் சர்வீஸ் குறைக்கப்பட்டது. அதன் பிறகு பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் டீசல் விலை ஏற்றத்தால் மீண்டும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் போக்குவரத்து கழகங்கள் புறநகர் பஸ்களின் எண்ணிக்கையை 1000 வரை குறைத்து விட்டன. இதேபோல் சென்னையில் மாநகர பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து லிட்டருக்கு ரூ.16 வரை அதிகரித்து இருப்பதால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.100 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு ஆகும் செலவில் 27 சதவீதம் டீசலுக்கு செலவிடப்படுகிறது.

செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக தற்போது மாநகர பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சில வழித்தடங்களில் சிறிய அளவிலும், நஷ்டத்தில் இயங்கும் வழித்தடங்களில் பாதி அளவுக்கும் பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் பஸ்கள் செல்லும் இடைவெளி நேரம் அதிகரித்துள்ளது. 30 நிமிடத்துக்கு மேல்தான் பஸ்கள் வருகின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுகிறார்கள்.

டீசல் விலை ஏற்றத்தால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணங்கள் உயர்ந்த நிலையில், பஸ்களின் எண்ணிக்கை குறைப்பு பயணிகளை மேலும் சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.

நாட்டிலேயே தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள்தான் எரிபொருள் சேமிப்பில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.

அரசு பஸ்கள் சீராக இயக்கப்படுவதால் லிட்டருக்கு 5 கி.மீ.க்கு மேல் கிடைக்கிறது. தனியார் பஸ்களில் லிட்டருக்கு 4 கி.மீ. அளவில் தான் ஓடுகிறது. அரசு பஸ் ஓட்டுனர்களால்தான் சாதனை இலக்கை எட்ட முடிகிறது என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. #DieselPriceHike #MTC #ChennaiBus
Tags:    

Similar News