செய்திகள்

மகனை கருணைக்கொலை செய்ய பெற்றோர் மனு - மருத்துவ அறிக்கை பார்த்து நீதிபதி கண்ணீர்

Published On 2018-10-04 15:08 GMT   |   Update On 2018-10-04 15:08 GMT
10 வயது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி கடலூரை சேர்ந்த பெற்றோர் தொடர்ந்த வழக்கில், மருத்துவ அறிக்கையை பார்த்ததும் நீதிபதி கிருபாகரண் கண்ணீர் சிந்தினார். #MercyKilling #MAdrasHC
சென்னை:

கடலூர் மாவட்டம் சோழத்தரத்தை சேர்ந்த திருமேனி என்ற தையல் தொழிலாளியின் 10 வயது மகனுக்கு வாய்பேச முடியாது, அடிக்கடி வலிப்பு ஏற்படுவதோடு, மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தனது மகனுக்கு பல்வேறு குழந்தைகள் நல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லாததாலும், தையல் தொழிலாளி என்பதால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

மேலும் தினம்தோறும் தனது மகனுக்கு 20 முறை வலிப்பு வருகிறது. மருந்துகள் கொடுத்தால் வலிப்பு ஏற்படும் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவனை பரிசோதித்த மருத்துவர்கள் தனது மகனை குணப்படுத்த முடியாது என தெரிவித்துவிட்டனர்.

எனவே தனது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு சிறுவனை பரிசோதனை செய்வதற்கான தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவ குழு தாக்கல் செய்த அறிக்கையில் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள அரிய நோயை சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை படித்ததும் நீதிபதி கிருபாகரன் கண்ணீர் சிந்தினார். சக நீதிபதி பாஸ்கரனும் சோகமானார்.

இதனை அடுத்து, சிறுவனின் பெற்றோருக்கு மாதம் தோறும் நிதியுதவி வழங்க முடியுமா? இது போன்ற பிரச்சனைகளுக்கு என தனி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஏன் உருவாக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

Similar News