செய்திகள்

புழல் சிறையில் சோதனைக்கு பிறகும் பணம் வசூல் - சிக்கன் பிரியாணி ரூ.700க்கு விற்பனை

Published On 2018-10-05 05:49 GMT   |   Update On 2018-10-05 05:49 GMT
புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் உறவினர்கள் கைதிகளுக்கு கொண்டுவரும் பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #PuzhalJail
சென்னை:

புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது தொடர்பான போட்டோ ஆதாரங்களும் வெளியானது.

இதனை தொடர்ந்து சிறையில் சோதனை நடத்தி தொலைக்காட்சி பெட்டிகள், சமையல் பாத்திரங்கள், அழகு சாதன பொருட்கள், திரைச் சீலைகள், செல்போன்கள் மெத்தைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து சிறை துறையில் நடக்கும் இந்த முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிறையில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் அவர்களுக்கு கொண்டு வரும் பொருட்களை விதிமுறைகளை மீறி சிறை துறை ஊழியர்களே வாங்கி கொடுத்துள்ளனர்.

இதற்கு லஞ்சமாக பணம் பெற்று வந்தனர். சிறையில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் அது பல மடங்காக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சோதனைக்கு முன்பு ரூ.250-க்கு விற்கப்பட்ட பீடி கட்டு, சோதனைக்கு பின்பு ரூ.500 ஆகியுள்ளது. ரூ.600-க்கு விற்ற சிகரெட் பெட்டி, சோதனைக்கு பின்பு ரூ.1,200 ஆகவும், 20 கிராம் பாக்கெட் கஞ்சா சோதனைக்கு பின்பு ரூ.10,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



சோதனைக்கு முன்பு ரூ.350 ஆக இருந்த சிக்கன் பிரியாணி, சோதனைக்கு பின்பு ரூ.700 ஆகவும், மட்டன் குழம்பு சோதனைக்கு முன்பு ரூ.700, சோதனைக்கு பின்பு ரூ.1,500 ஆகவும், மட்டன் சுக்கா சோதனைக்கு முன்பு ரூ.600, சோதனைக்கு பின்பு ரூ.1,200 ஆகவும் உள்ளது.

சிக்கன் 65 ரூ.1000 ஆகவும், ஆம்லேட் ரூ.100 ஆகவும், அவித்த முட்டை ரூ.40 ஆகவும் உள்ளது.

சிறைகளில் ஒன்று அல்லது இரண்டு கைதிகள் மட்டுமே தங்கக்கூடிய அறைகளைப் பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த அறைகளை ஒதுக்குவதற்கு சிறைத்துறையில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் அந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு இப்போதும் எழுந்துள்ளது.

புழலில் செல்வாக்குமிக்க ஒரு கைதிக்கு அறை ஒதுக்க ரூ.2 லட்சம் முன் பணம் பெறப்படுவதாகவும், பின்னர் மாதம் தோறும் ரூ.40 ஆயிரம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற் கிடையே புழல் சிறையில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் சுப்பையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் உள்ள ஒரு கைதி மதுரை கூலிப்படையிடம் இது தொடர்பாகப் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக புழல் கைதிகள் 2 பேர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #PuzhalJail

Tags:    

Similar News