ஊழலை தட்டிக் கேட்டவர்களை கைது செய்வதா? - ராமதாஸ் கண்டனம்
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால்களை அமைக்க மொத்தம் ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.12 கோடி மதிப்பிலான பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நிலையில், ரூ.5 கோடி மதிப்புள்ள பணிகளை பேரூராட்சியே மேற் கொள்கிறது.
சிட்லபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட சேதுநாராயணன் தெருவில் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 17-ந்தேதி தான் கடைசி நாள் ஆகும்.
ஆனால், ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவதற்கு 20 நாட்கள் முன்பாகவே மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
அப்படியானால், இந்த பணிகளை செய்வதற்கான ஒப்பந்தத்தை ஒருவருக்கு வழங்குவதென முன்பே முடிவு செய்து விட்டு, பெயரளவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்பதையும், இதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கக்கூடும் என்பதையும் உணர்ந்து கொண்ட ‘சிட்லப்பாக்கம் ரைசிங்’ என்ற உள்ளூர் விழிப்புணர்வு அமைப்பைச் சேர்ந்த சிலர் அதுகுறித்து அதிகாரிகளிடம் வினா எழுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் சிட்லப்பாக்கம் ரைசிங் அமைப்பைச் சேர்ந்த 61 வயது முதியவர் குமார், பாலச்சந்திரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதும், சிவக்குமார், சுனில் ஆகிய மேலும் இருவர் மீதும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிட்லப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான சுனில் பணி நிமித்தமாக பல நாட்களுக்கு முன்பே வெளிநாடு சென்றுள்ளார். இது பொய் வழக்கு என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை. ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த மக்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இதன் பின்னணியில் பெரிய சதி இருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. ஊழல் நடக்காத துறை எதுவுமே இல்லை. ஆனால், உள்ளாட்சித் துறை அளவுக்கு வேறு எந்த துறையிலும் அப்பட்டமாக ஊழல் நடக்கவில்லை.
ஒரு பணிக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படுவதற்கு முன்பாக அப்பணியை ஒருவருக்கு வழங்க முடிகிறது என்றால் உள்ளாட்சித் துறை ஒப்பந்தங்களை வழங்குவதில் அத்துறையின் அமைச்சரும், அவரது பினாமிகளும் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை அறியலாம்.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டது சிட்லப்பாக்கத்தில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி ஊழல்களை எதிர்ப்பவர்களுக்கு இதே நிலை தான் ஏற்படுகிறது.
தமிழகத்தின் ஆளுனர் மாளிகை இந்த அடக்கு முறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா? என்பது தெரிய வில்லை. சட்டத்தின் ஆட்சியை நடத்துவதில் ஆளுனருக்கு அக்கறை இருந்தால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்ய அறிவுறுத்த வேண்டும். அத்துடன் உள்ளாட்சித்துறை ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆளுனர் ஆணையிட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss