செய்திகள்

கற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி

Published On 2018-11-11 10:28 GMT   |   Update On 2018-11-11 10:28 GMT
எனது மகள் கற்பழிப்பு சம்பவம் நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார் என்று மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested

தருமபுரி:

மாணவியின் தந்தை அண்ணாமலை கூறியதாவது:-

எனது மகள் தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று நான் ஆடு மேய்க்க சென்று விட்டேன். எனது மனைவி தோட்டத்து வேலைக்காக சென்று விட்டார். வீட்டில் என் மகள் மட்டும் தனியாக இருந்தார். அவர் மலம் கழிக்க வீட்டில் இருந்து ஒரு பர்லாங் தூரத்தில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது சதீஸ், ரமேஷ் ஆகிய 2 வாலிபர்களும் என் மகளை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்ட போலீசில் நான் புகார் செய்தேன். ஆனால் போலீசார் புகார் மனுவை வாங்க மறுத்து விட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1077 என்ற எண்ணுக்கு போன் செய்து நடந்த சம்பவங்களை போனில் பேசியவர்களிடம் தெரிவித்தேன். மீண்டும். மறுநாள் காலை போலீஸ் நிலையத்துக்கு சென்றபோது அப்போதும் புகாரை வாங்க மறுத்து விட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் பேசிய பிறகு எங்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். எனது மகளிடம் புகார் மனுவை எழுதி வாங்கி கொண்டனர். போலீசார் சொன்னதை அவர் எழுதி கொடுத்தார்.

பின்னர் டி.எஸ்.பியை சந்தித்தோம். அவர் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறினார். பின்னர் போலீசார் வேனிலேயே எங்களை அழைத்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அப்போது டாக்டரிடமும் கற்பழிப்பு சம்பவத்தை கூற வேண்டாம் என்று போலீசார் தடுத்து விட்டனர். இதனால் வாந்தி - மயக்கம் ஏற்படுவதாக கூறி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் எனது மகளை காப்பகத்தில் சேர்த்து விட்டனர். தொடர்ந்து அவருக்கு வாந்தி மயக்கமும் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தோம். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். என் மகள் சாவு விவகாரத்தில் எனக்கு நீதி கிடைக்கவில்லை. எனது மகளை சீரழித்தவர்களை போலீசார் தப்ப விட்டு விட்டனர். இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது நடவடிக்கை எடுப்பதாக கூறி எங்களை ஏமாற்றி விட்டனர். மேலும் போலீசார் வாகனத்தில் எனது மகளை அழைத்து வந்து விட்டு என்னிடம் ரூ.4 ஆயிரம் வாங்கினார்கள். மேலும் 2 ஆயிரம் கேட்டனர். இப்போது நான் மகளை இழந்து தவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


எனது மகளை நாசம் செய்த 2 பேரையும் தூக்கில் போட வேண்டும். எனது மகளை சீரழித்தவர்களில் ஒருவரான ரமேஷின் தாயார் சிட்லிங் கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்து வருகிறார். அவருக்கு போலீசாருடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால் அவருடைய பேச்சை கேட்டு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #DharmapuriGirlStudent #GirlMolested 

Tags:    

Similar News