செய்திகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - வைகோ பேட்டி

Published On 2018-11-18 11:55 GMT   |   Update On 2018-11-18 11:55 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Vaiko #Gajastorm

வாடிப்பட்டி:

மதுரை அருகே உள்ள பரவையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு கஜா புயல் பாதிப்பில் இருந்து விவசாயிகளுக்கு முதலுதவியை சிறப்பாக செய்து விட்டது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட உண்மை விவசாயிகள், மீனவர்களை கண்டறிந்து தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

கஜா புயலில் இருந்து விவசாயிகளையும் மீனவர்களையும் பாதுகாக்க, கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, சிறந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற் கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை மனதாரப் பாராட்டுகிறேன்.

 


கஜா புயல் தாக்கிய நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் என வழி நெடுக அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டிருந்த வாழை, பலா, மா, தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன. தென்னை மரங்கள் பல ஆண்டு உழைப்பில் வளர்ந்தவை. தென்னை விவசாயிகளுக்கு நஷ்டஈடு, எவ்வளவு கொடுத்தாலும் மீண்டெழ முடியாத சோகம் சூழ்ந்த நிலையில் உள்ளனர்.

கரூர் பகுதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முருங்கை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. மீட்பு பணியில் 296 மருத்துவ அவசர உதவிக் குழுக்கள், பல்லாயிரக்கணக்கான மின் ஊழியர்கள், தண்ணீரில் இறங்கி, உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகின்றனர் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #Gajastorm

Tags:    

Similar News