செய்திகள்

பணம் எடுக்க உதவுவதாக நடித்து பெண்ணிடம் ரூ.37 ஆயிரம் கொள்ளை

Published On 2018-11-28 08:44 GMT   |   Update On 2018-11-28 08:44 GMT
விருகம்பாக்கத்தில் பணம் எடுக்க உதவுவதாக நடித்து பெண்ணின் கணக்கில் இருந்து 37ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:

விருகம்பாக்கம், வெங்கடேஷ் நகரைச் சேர்ந்தவர் நாராயணி (73). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

நாராயணி நேற்று முன்தினம் மாலை பணம் எடுப்பதற்காக அதே பகுதி காமராஜர் சாலை விநாயகம் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் நாராயணிக்கு பணம் எடுக்க உதவினார்.

பின்னர் நாராயணி வீட்டிற்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து நாராயணியின் செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.

அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து 37ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நாராயணி நேற்று வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது நாராயணி பணம் எடுத்த அதே ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கப்பட்டதும், அவரிடம் இருந்தது. மேலும் போலியான ஏ.டி.எம் கார்டு என்பது தெரியவந்தது.

பணம் எடுக்க உதவியவர் நாராயணியின் கணக்கில் இருந்து 37ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து நூதன முறையில் ஏமாற்றி பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலுமணி ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் பணத்தை எடுத்து தப்பி சென்றது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News