செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

மத்திய அரசை விமர்சிக்க கமலுக்கு தகுதி இல்லை- எச்.ராஜா

Published On 2018-12-02 09:22 GMT   |   Update On 2018-12-02 09:22 GMT
30 வருடமாக தமிழ் மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்திய கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்று எச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். #BJP #HRaja #KamalHaasan
ராயபுரம்:

கொருக்குப்பேட்டை 41-வது வார்டில் பா.ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘கஜா’ புயல் தாக்கி 6 மணி நேரத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று மக்களோடு நின்றார். அதுபோல மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நான் உள்பட மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் களத்தில் நின்று இன்று வரையிலும் மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம்.

மேலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் புயல் பாதித்த மாவட்டத்தில் தங்கி இருந்து மத்திய அரசிடம் தொடர்பு கொண்டு அடிப்படை தேவையான மண்எண்ணை முதல் அனைத்து நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்தார்.

கஜா புயலில் 6 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பது முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உடனடியாக சுமார் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இது போன்ற எண்ணற்ற பணிகளை மத்திய அரசு துரிதமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் புயல் பாதித்த இடங்களை 17-வது நாளில் பார்வையிட்ட கமல் மத்திய அரசு மக்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.



30 வருடமாக தமிழ் மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்திய கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது.

இதே போல மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அவர் மத்திய அரசையும், மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வந்தால் தி.மு.க.வை தோலுரித்து காட்டுவோம்.

2010-ம் ஆண்டு ‘தானே’ புயல் தாக்கிய போது அப்போதைய முதல்வர் கருணாநிதி புயல் பாதித்த இடங்களை நேரில் பார்த்தாரா? அதே போல் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தாரா? இதோடு ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வைகோ குழப்பத்தில் உள்ளார். எல்லாம் தெரிந்த மாதிரி பேசி வருகிறார். நாகரீகமற்ற முறையில் மோடியின் உடையை விமர்சிக்கிறார்.

வைகோவை துரைமுருகனே கண்டு கொள்ளவில்லை. அவர்தான் தி.மு.க. வாசலில் போய் உட்கார்ந்து கொண்டு உள்ளார்.

அரசியல் லாபத்துக்காக சில அரசியல் கட்சிகள் நாடகம் ஆடுகின்றன. மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். நம்பவும் கூடாது.

நடைபெறும் 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கனவு காண்கிறார். கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு.

காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்று தேடும் நிலை உள்ளது. இந்த நிலையில் இளங்கோவன் கூறி இருப்பது நகைச்சுவையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பா.ஜனதா நிர்வாகிகள் நடராஜன், சக்திவேல் மற்றும் பாஸ்கோ மாணிக்கம் உடன் இருந்தனர். #BJP #HRaja #KamalHaasan
Tags:    

Similar News