செய்திகள் (Tamil News)

ராசிபுரம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 26¾ பவுன் நகை திருட்டு

Published On 2019-01-03 17:46 GMT   |   Update On 2019-01-03 17:46 GMT
ராசிபுரம் அருகே, விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 26¾ பவுன் நகை திருட்டு போனது. இது தொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50), விவசாயி. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ராஜா (25) என்ற மகன், ஜெயம்மாள் என்ற மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. என்ஜினீயரான ராஜா கோவையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் தங்கவேல், அவருடைய மனைவி, மருமகள் ரம்யா ஆகியோர் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தங்கவேல் மனைவியுடன் அதே பகுதியில் உள்ள அவர்களது தோட்டத்துக்கு சென்று விட்டார். மருமகள் ரம்யாவும் 8.30 மணியளவில் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டார்.

மாலையில் ரம்யா வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தது.

பீரோவில் இருந்த 26¾ பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ரம்யா தங்கவேலுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். அதேபோல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது அங்கும், இங்கும் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News