செய்திகள்

சென்னை, கோவையில் 74 இடங்களில் வருமானவரி சோதனை

Published On 2019-01-29 05:27 GMT   |   Update On 2019-01-29 05:27 GMT
சென்னையில் 72 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். #ITRaid
சென்னை:

சென்னை, கோவையில் செயல்படும் நகைக்கடை, ஜவுளிக்கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை விவரத்தை வருமான வரித்துறைக்கு சரிவர தெரிவிக்காமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

இதன் அடிப்படையில் முக்கிய நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த வருமான வரி விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பல நிறுவனங்களில் வருமானத்துக்கு ஏற்ப வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்த வணிக நிறுவனங்களின் பட்டியல் எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று காலை சென்னையில் 72 வணிக நிறுவனங்களின் கடைகள், அலுவலகங்கள், குடோன்களில் ஒரே நேரத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதேபோல் கோவையில் 2 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.



இதில் ரேவதி குழுமத்தில் ஜவுளிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோக பொருட்கள், சூப்பர் மார்க்கெட் என 8 இடங்களில் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.

லோட்டஸ் குழுமம், ஜி.ஸ்கொயர் குழுமம் ஆகியவற்றிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சென்னையில் மொத்தம் 72 இடங்கள், கோவையில் 2 இடங்கள் என 74 இடங்களில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கணக்கில் வராத பணம், ஆவணங்கள் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்பது சோதனையின் முடிவில் வெளியிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #ITRaid
Tags:    

Similar News