செய்திகள்

போராட்டத்தை தூண்டும் வகையில் பேசிய வீடியோ காட்சி - அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு

Published On 2019-01-29 10:11 GMT   |   Update On 2019-01-29 10:11 GMT
பொள்ளாச்சியில் போராட்டத்தை தூண்டும் வகையில் பேசிய வீடீயோ காட்சி பரவி வரும் நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #jactoGeo
கோவை:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

அன்றைய தினம் பொள்ளாச்சி கோட்டூர் ரமணமுதலிபுதூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை சினேக லதா என்பவர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதுடன், பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றார்.

அப்போது பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு சென்ற சினேகலதா அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களையும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி அழைத்தார். போராட்டதுக்கான கோரிக்கைகள் குறித்து சினேகலதா சக ஆசிரியர்களுக்கு கூறியதோடு, ஆவேசமாகவும் பேசினார். அவரது இந்த பேச்சை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த காட்சிகள் வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

இதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி சினேகலதாவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில் சினேகலதா மீது பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) வெள்ளிங்கிரி என்பவர் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதன்பேரில் சினேகலதா மீது இந்தியதண்டனை சட்டம் 448-அத்துமீறி நுழைதல், 341- தடுத்து நிறுத்தி இடையூறு ஏற்படுத்துதல், 153- கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #jactoGeo
Tags:    

Similar News