செய்திகள்

அதிமுகவில் விருப்ப மனு அளிக்க இன்றே கடைசி நாள் - விண்ணப்பங்கள் குவிந்தன

Published On 2019-02-10 10:31 GMT   |   Update On 2019-02-10 10:42 GMT
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் நாள் இன்றுடன் நிறைவடைகிறது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. சார்பில் கடந்த 4-ந்தேதி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களை பலர் வாங்கினர். அவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.

நேற்று வரை 40 தொகுதிகளுக்கும் 1000-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ளனர். கடைசிநாள் விருப்பமனு விநியோகம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து இன்று தலைமை கழகத்தில் விருப்ப மனு அளிக்க ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர். அவர்கள் பூர்த்தி செய்த விருப்ப மனுக்களை அளித்தனர்.

தென்சென்னை தொகுதிக்கு ஜெயவர்தன் எம்.பி., வடசென்னை தொகுதிக்கு வெங்கடேஷ் பாபு எம்.பி., பொள்ளாச்சிக்கு லியாகத் அலிகான், ஈரோடுக்கு முன்னாள் மேயர் மல்லிகா உள்பட பலர் விருப்பமனு கொடுத்தனர்.

மதியம் 12 மணி வரை மொத்தம் 1300 பேர் விருப்ப மனு கொடுத்தனர். அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்படும். இதற்கிடையே விருப்பமனு விநியோகிக்க காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News