செய்திகள்

எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க.வை அசைக்க முடியாது - மு.க.ஸ்டாலின்

Published On 2019-02-20 09:23 GMT   |   Update On 2019-02-20 09:23 GMT
எத்தனை கூட்டணி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK

திருவள்ளூர்:

தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கிராம மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் பூந்தமல்லி அருகே உள்ள ஜமீன் கொரட்டூரில் இன்று காலை தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்காக அங்குள்ள வயல்வெளியில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்து இருந்தனர்.

காலை 10 மணியளவில் மு.க.ஸ்டாலின் ஜமீன் கொரட்டூருக்கு வந்தார். அவர் அங்குள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கிராமசபை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். பெரும்பாலானோர் தெரு விளக்கு, சாலை வசதி, கழிவுநீர் வசதி செய்யப்பட வில்லை என்று குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர முக்கிய காரணம் ஊழல் வழக்குகள்தான். பா.ஜ.க.வினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் போடுவதாக பொய்யான வாக்குறுதி அளித்திருந்தனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. போன்ற கட்சிகள் இருந்தாலும் தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெறும். அவர்கள் ஆசையால் கூட்டணி நாடகம் ஆடுகிறார்கள். எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது தி.மு.க.தான். கலைஞர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம். முதியோர் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உற்சாகமாக மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடினர். ஏராளமானோர் கை குலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இதில் பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட ஜமீன் கொரட்டூர், வெள்ளவேடு, நெமிலிச்சேரி, நேமம், புதுச்சத்திரம் உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #MKStalin #DMK

Tags:    

Similar News