செய்திகள்

அரசியல் நாகரீகம் இல்லாத தேமுதிக- கொமதேக பாய்ச்சல்

Published On 2019-03-09 09:55 GMT   |   Update On 2019-03-09 09:55 GMT
பாராளுமன்ற தேர்தலில் நாகரீகம் துளியும் இல்லாமல் பேர அரசியலில் ஈடுபடும் தேமுதிகவை கொ.ம.தே.க செயலாளர் சாடியுள்ளார். #dmdk #kmdk #parliamentelection

ஈரோடு:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுடன் மற்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டணி அமைத்து வரும் நிலையில் தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வருவதற்கு அதிமுக- தேமுதிக இடையே பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடை பெறுவதை நாம் அறிவோம்.

ஆனால் கடந்த சில நாட்களாக இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வை பார்க்கும் போது தமிழக மக்கள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. ஏதோ வியாபாரத்தில் இடைத் தரகர்கள் செய்யும் வியாபார உத்தியை போல கூட்டணி பேரத்தை தேமுதிக- அதிமுக 2 கட்சிகளும் மாறி மாறி அரங்கேற்றி வருவது தமிழக அரசியலுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லதல்ல.

தேமுதிக தங்களுடைய கூட்டணி பேரத்தை அதிகரிக்க என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் செய்வார்கள் என்பதை கடந்த சில தினங்களாக நடக்கும் நிகழ்வு வெளி காட்டியிருக்கிறது.

அரசியல் நாகரீகம் துளியும் இல்லாமல் பேர அரசியலை கொண்டு இவ்விரு கட்சிகளும் அமைக்கும் கூட்டணி எப்படி மக்கள் நலம் சார்ந்த கூட்டணியாக இருக்க முடியும்? தமிழக மக்களுக்கு போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லை என்று இவ்விரு கட்சிகளும் கருதுகிறார்களா? இந்த 2 கட்சிகளும் அமைக்கும் வியாபார அரசியல் கூட்டணிக்கு தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடியை கொடுக்க தயாராகி விட்டார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. 

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.  #dmdk #kmdk #parliamentelection

Tags:    

Similar News