செய்திகள்
காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

அயோத்தியாப்பட்டணம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்

Published On 2019-04-08 11:44 GMT   |   Update On 2019-04-08 11:44 GMT
அயோத்தியாப்பட்டணம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள கோராத்துபட்டி, சத்தியா நகர் காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு மாதத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும், அரசியல் கட்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் திரண்டு வந்து திடீரென வீராணம் மெயின் ரோடு மண்ணார்பாளையம் பிரிவு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் 2 பக்கமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

இது பற்றி தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார், அங்கு வரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இன்ஸ்பெக்டரிடம் பொதுமக்கள் நாங்கள் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறோம். குளிக்க தண்ணீர் இல்லை. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தண்ணீர் வராவிட்டால் நாங்கள் தற்கொலை தான் செய்து கொள்வோம் என்று ஆவேசமாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு இன்ஸ்பெக்டர், உங்களது குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் கொடுத்து உள்ளேன். அவர் இங்கு வர உள்ளார். ஆகவே சாலை மறியலை கைவிட்டு போக்குவரத்திற்கு வழிவிடும்படி கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள், மறியலை கைவிட்டு சாலையின் ஓரமாக அதிகாரி வருகைக்காக காத்து நின்றனர். அப்போது அவர்கள் கூறு கையில் அதிகாரி இங்கு வந்து உறுதி அளிக்கவில்லை என்றால் நாங்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News