செய்திகள்

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மீது வழக்கு

Published On 2019-05-11 04:47 GMT   |   Update On 2019-05-11 04:47 GMT
புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் சோனைமுத்து. இவர்களுக்கு சொந்தமான கார் 2016-ல் திருட்டு போனது.

இதுகுறித்து ஜெயலட்சுமி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். மேலும் போலீசார் வெளி ஆட்களான ஆறுமுகம் மற்றும் சிலரை வைத்தும் மிரட்டல் விடுத்தனர்.

மிரட்டல் விடுத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவரது தூண்டுதலின் பேரில் செயல்பட்ட ஆறுமுகம் உள்பட சிலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலட்சுமி மதுரை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தது உண்மையாக இருந்தால் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையாளர் பாஸ்கரன் விசாரணை நடத்தி, சம்பவத்தன்று ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரமணி, சப்-இன்ஸ்பெக்டர் புலிக்குட்டி அய்யனார் மற்றும் ஆறுமுகம் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News