செய்திகள் (Tamil News)
சுப்பிரமணியசாமி

மேல்கோர்ட்டில் ஆ.ராசா-கனிமொழிக்கு சிறை தண்டனை கிடைக்கும்: சுப்பிரமணியசாமி பேட்டி

Published On 2019-09-03 11:19 GMT   |   Update On 2019-09-03 11:19 GMT
2ஜி அலைக்கற்றை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் கீழ்கோர்ட்டில் தப்பி விட்டார்கள். மேல் கோர்ட்டில் 2 பேருக்கும் சிறை தண்டனை கிடைக்கும் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

நெல்லை:

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி நெல்லை சங்கர்நகர் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் பொருளாதார பின்னடைவு ஏதும் இல்லை, பின்னடைவு என்று கூறுவது தவறு. கடந்த மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலும் பொருளாதார பின்னடைவு இருந்தது. நாட்டில் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு பாதி தவறு, முந்தைய காங்கிரஸ் அரசுதான். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது செய்த தவறான வேலைகளுக்கான விளைவு தற்போது ஏற்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்கை யாரும் அப்போது கேட்க வில்லை, அவர் பிரதமர் பெயரில் பொம்மை போல் இருந்தார். சோனியாவும், சிதம்பரமும் தான் முடிவுகளை எடுத்துள்ளனர். அவர்கள் ஏராளமாக செய்த ஊழல் மற்றும் முதலீடு என்ற பெயரில் வங்கியில் இருந்த பணத்தை காணாமல் போகச் செய்து விட்டனர். முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சந்திரசேகர் ஆட்சி காலங்களில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயர்ந்து இருந்தது.

நமது மக்களுக்கு ஊக்கம் கொடுத்தால்தான் நல்ல வேலை செய்வார்கள். ஆனால் அவர்கள் மீது வரி மேல் வரி போட்டு, புரியாமல் இருக்கும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்குசேவை வரி போட்டு உள்ளனர். அதனை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நமது கிராமத்தில் மின்சாரமே கிடையாது, கணினிக்கு எங்கே போவது? பா.ஜ.க. அரசு வரியை குறைத்து, பொருளாதார கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது அவசியம். இல்லாவிடில் 6 மாதங்களில் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

ப.சிதம்பரம் தன்னை திகார் சிறைக்கு அனுப்பி விடாதீர்கள், வீட்டு சிறையில் வையுங்கள் என்று கெஞ்ச தொடங்கி விட்டார். சிதம்பரம் ஏராளமாக ஊழல் செய்து உள்ளார். இது முதல் வழக்குதான். இதுதவிர விமானம் வாங்கியது உள்பட 7 வழக்குகள் உள்ளன. அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அவருடைய குடும்பத்தினருக்கும் சிறை தண்டனை கிடைக்கும்.

இதுதவிர சோனியாவுக்கும் தண்டனை கிடைக்கும். மனைவியை கொலை செய்ததற்கு சசிதரூருக்கு தண்டனை கிடைக்கும். மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் சிறை தண்டனை கிடைக்கும். எனவே காங்கிரஸ் செயற்குழுவை திகார் சிறையில் நடத்தலாம். அத்தனை பேரையும் திகார் சிறையில் போடுவார்கள்.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் கீழ்கோர்ட்டில் தப்பி விட்டார்கள். மேல் கோர்ட்டில் 2 பேருக்கும் சிறை தண்டனை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News