செய்திகள் (Tamil News)
மரங்களில் காய்த்து குலுங்கும் அவக்கோடா பழங்கள்

கொடைக்கானல் பகுதியில் மரங்களில் காய்த்து குலுங்கும் அவக்கோடா பழங்கள்

Published On 2020-05-13 13:27 GMT   |   Update On 2020-05-13 13:27 GMT
கொடைக்கானல் பகுதியில் மரங்களில் அவக்கோடா பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் வெளிநாட்டினர் விரும்பி சாப்பிடுகின்றனர்.
கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் அடுக்கம், பெருமாள்மலை, வடகவுஞ்சி, பேத்துப்பாறை, பண்ணைக்காடு, பூலத்தூர் கும்பரையூர், ஊத்து உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ‘பட்டர் புரூட்’ என்று அழைக்கப்படும் அவக்கோடா பழங்கள் அதிக அளவில் விளைச்சலாகின்றன.

இந்த பழங்களில் பல்வேறு வைட்டமின் சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் கால்சியமும் அதிக அளவில் உள்ளது. மேலும் எந்த பழத்திலும் இல்லாத அளவுக்கு இதில் நல்ல கொழுப்பு சத்து உள்ளது. இந்த பழங்களை வெளிநாட்டினர் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். அவர்கள் தினசரி ஒரு வேளை உணவாகவே இந்த பழங்களை சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்த பழங்களின் பலன்கள் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாக பலரும் இதனை சாப்பிடுவதில்லை. தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்த பழங்களை அதிகளவில் வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கொடைக்கானல் பகுதியில் தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் மரங்களில் அவக்கோடா பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. ஊரடங்கு உத்தரவால் அவற்றை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கொடைக்கானல் விவசாயிகள் கூறுகையில், பட்டர் புரூட் என்றழைக்கப்படும் அவக்கோடா பழங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால் தமிழகத்தில் இந்த பழங்கள் அதிகளவில் விற்பனை ஆவதில்லை. கோவா, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்குமே அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் இந்த பழங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இந்த பழங்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றனர்.

இதுகுறித்து கொடைக்கானலை சேர்ந்த டாக்டர் முத்துவேந்தன் கூறுகையில், பட்டர் புரூட் பழங்களை, இதய நோய், சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடலாம். மேலும் பொதுமக்களும் ஆண்டு முழுவதும் இந்த பழங்களை உணவாக சாப்பிடலாம். இதுதவிர உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த பழங்களை சாப்பிடலாம் என்றார்.

Similar News