செய்திகள் (Tamil News)
சீகூர் வனப்பகுதியில் புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் மரக்கன்று நட்டபோது எடுத்தபடம்.

முதுமலையில் வன உயிரின வார விழா தொடக்கம்

Published On 2020-10-03 07:58 GMT   |   Update On 2020-10-03 07:58 GMT
முதுமலையில் வன உயிரின வார விழா தொடங்கியது. இதையொட்டி புலிகள் காப்பக சீகூர் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.
கூடலூர்:

வன உயிரின வார விழா, ஆண்டுதோறும் அக்டோபர் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி முதுமலையில் வன உயிரின வார விழா தொடங்கியது. இதையொட்டி புலிகள் காப்பக சீகூர் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மற்றும் வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறியதாவது:-

வன உயிரின வார விழா மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 150 மரக்கன்றுகள் நடப்பட்டது. சீசர் வனத்தில் 4 வகையான கழுகுகள் உள்ளன. பெரும்பாலும் நீர் மரடு, டெர்மினியா அர்ஜூனா மரங்களில் கழுகுகள் வாழ்கின்றன. இதனால் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

இது தவிர 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வருகிற 8-ந் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. வளமான காடுகளை உருவாக்குவதில் புலிகளின் பங்கு என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிகளில் இருந்து 2 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். முதலில் பதிவு செய்யும் 20 போட்டியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள் wIw 2020mtr@gmail.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். தமிழ் பேச்சுப்போட்டி காலை 10:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், ஆங்கில பேச்சுபோட்டி மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News