செய்திகள் (Tamil News)
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது எடுத்தபடம்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2021-01-08 03:27 GMT   |   Update On 2021-01-08 03:27 GMT
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகிற 15-ந் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா 16-ந் தேதியும் நடைபெற உள்ளன. இந்தநிலையில் அலங்காநல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நேற்று காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது.

மதுரை மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் ராஜ்திலகன், உதவி மருத்துவர் கருப்பசாமி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் காளைகளின் உயரம், அளவு, கொம்பின் உயரம், கண் பார்வை உள்ளிட்ட உடற்தகுதி பரிசோதனை செய்யப்பட்டது..

காளை பதிவு செய்ய வருபவர்கள் அதற்கான புகைப்படம் ஆவணங்களுடன் வந்து பதிவு செய்தனர். மேலும் இந்த முறை கொரோனா ஊரடங்கு காரணமாக காளை உரிமையாளர் ஒருவர் மற்றும் உதவியாளர் என இருவர் மட்டுமே கொரோனா சான்று பெற்று, காளையுடன் போட்டி நடைபெறும் இடத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் தகுதியான காளைகளுக்கு 11-ந் தேதி முதல் அதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிகிறது. அலங்காநல்லூர் சுற்று வட்டாரங்களை சேர்ந்த காளைகள் நேற்று பதிவு செய்யப்பட்டன.

Similar News