செய்திகள்
வீடுகளை சூழ்ந்த மழைவெள்ளம்

திருச்சி அருகே தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம்: வீடுகளுக்குள் புகுந்தது

Published On 2021-11-05 11:39 GMT   |   Update On 2021-11-05 11:41 GMT
திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. காட்டாற்று வெள்ளம் ஓடக்கூடிய இடத்தில் மேம்பாலம் பணி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

டால்மியாபுரம்:

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கன மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியதோடு, பல இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் கோவண்டாகுறிச்சி ஊராட்சி வடுகர்பேட்டை, காமராஜபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது.

இதனால் அப்பகுதி பொது மக்கள் இரவு முழுவதும் பெரிதும் அவதிக்குள்ளாயினர். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. காட்டாற்று வெள்ளம் ஓடக்கூடிய இடத்தில் மேம்பாலம் பணி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

அந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக பொதுமக்கள் காவல் துறை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தை ஊராட்சி மன்ற தலைவர் வியாகுல ஈஸ்வரி ஜெயக்குமார் மற்றும் கல்லக்குடி காவல்துறையினர் பார்வையிட்டு தண்ணீர் வடிந்து செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இங்கு வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள். வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து குழந்தைகளுடன் பாதுகாப்பாக வாழ நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இப்பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மழை வருவதற்குள் இப்பகுதியில் மழைநீர் வழிந்தோட தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News